Tuesday, July 13, 2010

நாங்கள் கோழைகளல்ல: சீமான்

எங்கள் மீது தமிழக அரசு போடும் பொய் வழக்குகளை நாங்கள் சட்டப்படி சந்திப்போமே தவிர ஒருபோதும் ஓடிஒளிய நாங்கள் ஒன்றும் கோழைகளல்ல என்பதை தமிழக அரசுக்குத் தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கைதான சீமான் தான் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை பத்திரிகையாளர்களிடம் வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:

உலகமே இன்றைக்கு இலங்கையின் ராஜபக்சே அரசு ஈழத்தமிழர்க்கெதிராக போர்க்குற்றம் புரிந்திருக்கிறதா, இல்லையா என ஆய்வுச் செய்திட ஐ.நா. மன்றம் மூலம் குழு அமைத்து ஆராயச் சொல்கிறது. ஆனால் இலங்கை அரசின் ஒரு அமைச்சர் விசாரணை நடத்த ஐ.நா. குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கமாட்டோமென மிரட்டுகிறார். சாகும்வரை உண்ணாவிரதமிருக்கிறார். அதை முடித்து வைப்பதற்கு இந்நாடகத்தின் சூத்திரதாரியான ராஜபக்சேவே செல்கிறார்.

இலங்கை பாதுகாப்புச் செயலாளரும், அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபைய ராஜபக்சே விசாரணைக்கு முன்பே, அரசின் மீதும், ராணுவத்தின் மீதும் விசாரணை ஏதும் நடத்தமாட்டோமென்று ஐ.நா.குழு உறுதியளிக்க வேண்டுமென நிபந்தனை விதிக்கிறார். அதுமட்டுமின்றி சரத்பொன்சேகா ஐ.நா.குழுவிற்கு சாட்சியமளித்தால் அவரைத் தூக்கிலிடுவோம் என பிபிசிக்கு அளித்த நேர்காணலில் மிரட்டுகிறார்.

போர்க்குற்றம் செய்யாதவர்கள் என்றால் இப்படியெல்லாம் ஐ.நா.வை அவமானப்படுத்துவது ஏன்? விசாரணை நடத்த ஒத்துழைக்க மறுப்பதேன்? சுதந்திரமாகவும் நியாயமாகவும் விசாரணை நடத்த அனுமதித்தால் இலங்கை போர்க்குற்றவாளி நாடாக அறிவிக்கப்படும் என்ற அச்சத்தால் ஐ.நா. குழுவின் விசாரணைக்கு இவர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதுதானே உண்மை.
ஐ.நா.வின் பாதுகாப்பு அவையில் இடம்பெற முயற்சிக்கும் இந்தியா இதுவரை இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து வாய் திறக்காதது ஏன்? 2009 ஜனவரியில் காசா பகுதியில் சுமார் 1700 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டபோது, அதே ஆண்டு ஏப்ரலில் ஐ.நா.மன்றம் அமைத்த போர்க்குற்ற விசாரணைக் குழுவை வரவேற்ற இந்திய அரசு, இலங்கையில் முள்ளிவாய்க்கால் போரில் சுமார் ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் கொத்துக் குண்டுகளாலும், பாஸ்பரஸ் குண்டுகளாலும் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு இதுவரை ஏன் கண்டிக்கவில்லை? போர்க்குற்ற விசாரணை நடத்தச் செல்லும் ஐ.நா.குழுவை இந்தியாவும் தமிழக அரசும் ஆதரிக்கிறதா, இல்லை எதிர்க்கிறதா என்று சொல்லட்டும்.

மிகச் சிறிய நாடான இலங்கை ஐ.நா. மன்றத்தையே அவமானப்படுத்தும்போது மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதைக் கண்டிக்க அஞ்சுவது ஏன்? சீனக் கைதிகளை இலங்கை இறக்குமதி செய்திருப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக அமையும் என்று ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்திய அரசு இதைப்பற்றி சிறிதும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இலங்கை அனுமதித்துள்ள 25,000 சீனக்கைதிகளில் பயங்கர குற்றவாளிகளும், உளவாளிகளும் இருக்க மாட்டார்கள் என்று என்ன உறுதியிருக்கிறது? அப்படிப்பட்டவர்களால் இந்தியாவின் பாதுகாப்பு பகுதியாகவும் ராணுவத்தளங்கள் அமைக்க தகுதியான இடமாகவும் கருதப்படும் தென்னிந்தியாவிற்கு குந்தகம் விளையாதா?
இந்தியா, இலங்கை வங்கதேசம், பாகிஸ்தான், மாலத்தீவு போன்ற சார்க் நாடுகளில் இலங்கையைத் தவிர வேறு எந்த நாட்டு கடலோரப் படைகளும், தன் அண்டை நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் சுட்டுக்கொல்வது கிடையாது. கைது செய்து அந்தந்த நாட்டிற்கே அனுப்பிவைத்து விடுவதுதான் வழக்கம். ஆனால் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைக் கொன்ற சிங்கள அரசைத் தட்டிக்கேட்க துணிவு இல்லாவிட்டாலும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திலோ, ஐ.நா.மனித உரிமை ஆணையத்திடமோ முறையிட்டு இலங்கை அரசை, இந்தியா தண்டிக்க தவறியது ஏன்?
அரசு, ஆட்சி, அதிகாரம் எல்லாம் உங்கள் கைகளில் தானே இருக்கிறது. அவையெல்லாம் எதற்கு? ராஜபக்சேவுக்கு வெண்சாமரம் வீசுவதற்கா? மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி 168 இந்தியர்களை சுட்டுக் கொன்றதற்காக பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப மறுத்த இந்தியா முள்ளிவாய்க்கால் போரில் இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர்கள் 15,000 பேர், 50000 ஈழத்தமிழர்களோடு இனப்படுகொலை செய்யப்பட்டதையும் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இந்திய கடற்பகுதியிலேயே சிங்கள கடற்படை கொன்றதையும் உதாசீனப்படுத்திவிட்டு இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு இரண்டு முறை அனுப்புவது இந்திய ஒருமைப்பாட்டின் இலட்சணத்திற்கு இதுதான் அடையாளமா?
மலேசியாவில் சுமார் 250 ஆந்திர மென்பொருள் பொறியாளர்களின் கடவுச்சீட்டை அந்நாட்டின் காவல்துறை கிழித்து அவமானப்படுத்தியபோது, ஆந்திர முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு, அப்போதை பிரதமர் வாஜ்பாய்க்க்கு நெருக்கடி தந்து உடனடியாக புதுக்கடவுச் சீட்டு வழங்கக் செய்ததோடு மலேசிய அரசுடனான சுமார் 65000 கோடி ரூபாய் இந்திய வணிகத்தையே ரத்து செய்ய வைத்தார்.


ஹரியானா வம்சாவழி வந்த பிஜி நாட்டின் அதிபர் சவுத்ரி ராணுவப் புரட்சியால் தூக்கி எறியப்பட்டதற்கு, ஹரியானா முதல்வராக இருந்த சவுதாலாவின் வற்புறுத்தலை ஏற்று இந்திய அரசு பிஜி நாட்டுடனான அரச உறவுகளை துண்டித்துக் கொண்டதோடு தன்னாட்டு தூதுவரையும், பிஜியிலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டது. 

கென்யா நாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் குஜராத்தியர்கள் பாதிக்கப்பட்டபோது, இந்தியாவில் உள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கென்யாவில் வாழும் குஜராத்தியர்கள் கடவுச்சீட்டு இல்லாமல் இந்தியா வரலாம். அவர்களை குஜராத் அரசு பாதுகாக்கும் என்று துணிவோடு பேசினார். ஆனால் தமிழக முதல்வர் கலைஞரோ, 83 வயதான உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற மலேசியாவில் இருந்து இந்தியா வந்த பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாளை இரக்கமில்லாமல் விமானதளத்தில் இருந்து திருப்பி அனுப்பிய கருணைக்கடல் அல்லவா நீங்கள்?
சிங்கள கடற்படையினரால் கொடூரமாகச் சுட்டும், அடித்தும் கொல்லப்பட்டும் தமிழக மீனவர்கள் இந்தியர்களில்லையா? அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டா இல்லையா? எனக்கேட்டால், பொறுப்புள்ள ஒரு தமிழக முதல்வர், ''சூராதி சூரர்கள், சூரபத்ம பேரர்கள் இதோ புறப்பட்டுவிட்டது இலங்கைக்கு எங்கள் படை என்று கடற்படையை அனுப்பப் போகின்றார்களா?'' என்றும் ''கொழும்புக்கு கடலிலேயே நீந்திச் சென்று அங்குள்ள கோட்டைக் கொத்தளங்களை முற்றுகையிடப் போகிறார்களா?'' என்றும் தமிழர்களைக் கேலி பேசி இருப்பது தமிழினத் தலைவருக்கு அடையாளமா?
உலகில் வாழும் 10 கோடி தமிழர்களும் ஐ.நா.மன்றம் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆய்வு செய்யும் குழுவை நியமனம் செய்ததற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கும், இதற்கு பெருமுயற்சி எடுத்துக்கொண்ட ஐரோப்பிய, அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு நன்றிகள் செலுத்தி பாராட்டி வருகிறார்கள். 

இனப்படுகொலையை விசாரிக்க இவர்கள் எடுக்கும் நல்ல முயற்சிக்கு யார் தடையாய் இருக்க நினைத்தாலும் அதனை முறியடித்துக் காட்டும் ஆற்றல் உலகத் தமிழர்க்கு உண்டு எனவே ஈழத்தமிழரையும், தமிழக மீனவர்களையும் காத்திட ஆட்சியில் உள்ளவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தாங்கள் எங்களை இலங்கைக்குச் செல்ல தூண்டிவிடுவது போல், தமிழக இளைஞர்களை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வழியில் ''பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைவித்தால், சங்காரம் நிஜமென சங்கே முழங்கு'' என்கிற வழியில் எங்களை அனுமதிக்க நீங்கள் தயாரா? எங்கள் மீது தமிழக அரசு போடும் பொய் வழக்குகளை நாங்கள் சட்டப்படி சந்திப்போமே தவிர ஒருபோதும் ஓடிஒளிய நாங்கள் ஒன்றும் கோழைகளல்ல என்பதை தமிழக அரசுக்குத் தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துக்கள்(10)
Name : TamilanCountry : SingaporeDate :7/13/2010 7:20:07 AM
காவல்துறை கைது செய்துவிடுவார்கள் என்று ஓடி மறைந்திருந்த தமிழ்மரவன் சீமான் வாழ்க!!!!
Name : nesan germanyDate :7/13/2010 1:47:20 AM
மான ரோசம் உள்ளவனிடம்தான் இந்த கேள்வியை கேட்க்கலாம் சீமான் அவர்களே, சொக்கத்தங்கம் கோவபடாமல் இருக்கவேனுமென்றல் கைதுதான் சரியான வழி.
Name : gunnaCountry : DenmarkDate :7/12/2010 11:40:35 PM
ஸ்ரீலங்கா போர்குற்றம் புரியவில்லை இந்தியாதான் எல்லாத்துக்கும் காரணம்
Name : thamilanDate :7/12/2010 10:29:41 PM
ஸ்ரீலங்கா போர்குற்றம் புரியவில்லை இந்தியாதான் எல்லாத்துக்கும் காரணம்
Name : RamachandranCountry : AustraliaDate :7/12/2010 9:49:43 PM
Annan seeman Austrians Indians (thalappakuttu) maranthuvitar.
Name : illengasCountry : FinlandDate :7/12/2010 8:39:07 PM
தமிழனை கொள்ளும் சிங்களவன் நல்லவன் சிங்களவனை திட்டியா சீமான் கேட்டவன் உங்க ஜர்ஜ்மென்ட் ரொம்ப சூப்பர் .............
Name : balaCountry : United KingdomDate :7/12/2010 8:19:12 PM
தனது மக்களை சுட்டு கொண்ட சிங்கள அரசை கேள்விகேட்க வக்கிலாத அரசு அந்த மக்களுக்கு ஆக குரல் கொடுத்தவனை கைது செய்கிறது
Name : sakthyDate :7/12/2010 8:04:07 PM
தமிழனுக்கு தமிழன் விரோதி. ஈழத் தமிழனுக்கு ஆதரவாக பேசும் தமிழன் மேல் பாய தமிழன் சட்டம் இயற்ற இருக்கிறான்.இவன் தமிழ் பால் குடித்த தமிழனா,ஆரியப் பால் குடித்த ஆரியத் தமிழனா?
Name : K.VeeramaniDate :7/12/2010 6:36:17 PM
திரு.சீமான் அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் இந்த அரசு பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது...
Name : தமிழன்Date :7/12/2010 6:17:54 PM
ஈழத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள வித்தியாசம் இவ்வளவுதான் அவன் கொல்லுறான் நீங்க சிறையில் அடைகிறீர்கள் .நக்கீரா நான் இதற்க்கு முதலில் எழுதிய கருத்துக்கள் தடுக்கப்பட்டுள்ளன .நீயும் நடு நிலை தவறியதேனோ ????????

No comments:

Post a Comment